சுதந்திர தமிழீழம் அமைய தமிழ்க்குலம் உறுதி ஏற்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.! - Seithipunal
Seithipunal


ஈழத்தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும் என வைகோ ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர்.

மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்ட இயேசு, தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து சபையில் நிறுத்தப்பட்டார். சதிகாரர்களின் காட்டுக் கூச்சலால் வேறு வழி இன்றி, இயேசுவை சிலுவையில் அறையுமாறு ஒப்புக் கொடுத்தான்.

இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, முகத்தில் காரித்துப்பி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்தனர். கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுக்கு நடுவே, அவரும் சிலுவையில் அறையப்பட்டார்.

‘தேவாலயத்தை இடித்து மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக் கொள்’ என்று நிந்தித்தனர்.

சிலுவையிலே ஆவியை நீத்த இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததையே, இன்று உலகம் கொண்டாடுகிறது.

கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.

இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. தமிழகத்தில் அற்புதமான ஆட்சி அன்புச் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ளது. கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்தப் புனித வெள்ளிக்கிழமையன்று சபதம் ஏற்போம்.

மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். கொடியவன் ராஜபக்சே கூட்டம் அனைத்துலக நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையோடு, ஈழத்தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும்.

அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko extend wishes for Easter


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->