தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்யவேண்டும்.! வைகோ வலியுறுத்தல்.!! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டுப் பல்கலைக் கழக தமிழ் இருக்கைகளில் தமிழ்ப் பேராசிரியர்களை நியமனம் செய்யவேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் (Indian Council for Cultural Relations -ICCR)  சார்பில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்தமதம் மற்றும் இந்தியக் கல்வி என சுமார் 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்ககைள் 1970 ஆம் ஆண்டு முதல் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இவ்வாறு அமைந்துள்ள வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கான இருக்கைகள் நூற்றுக்கும் மேற்பட்டவை 2014 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாகக் குறைந்து விட்டன. தற்போது 51 இருக்கைகள் மட்டுமே எஞ்சி உள்ளன. இதிலும் அதிகபட்சமாக இந்தி மொழியும், அடுத்த நிலையில் சமஸ்கிருதமும் இருக்கின்றன.

இந்தப் பட்டியலில், போலந்து நாட்டின் வார்ஸா பல்கலைக் கழகத்திலும், கிராக்கூப்யாகி எலோனியன் பல்கலைக் கழகத்திலும்  தமிழுக்காக வெறும் இரண்டு இருக்கைகள் அமைந்துள்ளன. இவற்றுக்குக் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கடந்த 2015 இல் கேரளா பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெயகிருஷ்ணன்  ஐசிசிஆர் மூலம் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரையும் இந்திய அரசு போலந்துக்கு அனுப்பவில்லை.
தற்போது ஐசிசிஆர் சார்பில் வெளியிடப்பட்ட இருக்கைகளுக்கான விளம்பரத்தில், தமிழ் இடம் பெற்றுள்ளது. ஆனால் பேராசிரியர் பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் ஐசிசிஆர் இணையதளத்தில் தமிழ் இடம்பெற வில்லை.

ஐசிசிஆர் மூலம் வெளிநாட்டு இருக்கைகளுக்கு தேர்வு செய்யப்படும் பேராசிரியர்களுக்கு ஊதியத்தை இந்திய அரசு வழங்கும். உணவு மற்றும் தங்கும் வசதிகளை தொடர்புடைய நாடுகளின் கல்வி நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்நிலையில், வார்ஸா பல்கலைக் கழகத்தில் 48 ஆண்டுகளாக இந்திய மொழிகளில் தமிழ் இருக்கை இடம் பெற்றுள்ளது. கிராக்கூப் யாகி எலோனியன் பல்கலைக் கழகத்தில் 2008 ஆம் ஆண்டு முதல் தமிழ் இருக்கை அமைந்திருக்கிறது. 2014 இல் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபின்னர், கடந்த எட்டு ஆண்டுகளாக தமிழ்த் துறையின் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

தற்போது இந்திய கலாச்சார உறவுகளுக்கான மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலும் தமிழ்ப் பேராசிரியர்கள் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படவில்லை. தமிழ் மொழியின் மீதும், திருக்குறள் மீதும் ஆர்வமும் பற்றும் உடையவராக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் தமிழ் இருக்கைகள் அமையவும், தமிழ்த் துறைப் பேராசிரியர்கள், ஆய்வு அறிஞர்களை நியமனம் செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko statement on july 28


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->