ஜல்லிக்கட்டு தீர்ப்பு.. இது நமக்கான வெற்றி.. நம் மண்ணுக்கான வெற்றி.. அதிமுக விஜயபாஸ்கரின் உணர்ச்சி மிக்க ட்விட்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதன் காரணமாக மாடுகளை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசுகள் சட்டப்பேரவையில் சிறப்பு சட்டம் இயற்றி விலக்கு பெற்றன. 

இதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதனை எதிர்த்து பீட்டா, கூபா போன்ற அமைப்புகள் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்கு முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான அதிமுகவைச் சேர்ந்த விஜயபாஸ்கர் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "நம் ஊனில், உயிரில், உதிரத்தில் கலந்திருக்கும் #ஜல்லிக்கட்டு வழக்கில் மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு "நாடே எதிர்பார்த்த நல்ல தீர்ப்பை வழங்கி தமிழ் மண்ணை, மக்களின் இதயங்களை குளிர வைத்திருக்கிறது." ஜல்லிக்கட்டு என்பது வெறும் போட்டி அல்ல தமிழர்களின் பாரம்பரியம்; கலாச்சாரம். இது வெறும் வழக்கு மட்டுமல்ல எங்களின் வாழ்க்கை. அதனை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என இடைவிடாது போராடிய நமக்கு இன்று நல்ல விடை கிடைத்திருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில், நம் மண்ணின் மக்களின் உணர்வுகளில் இரண்டற கலந்திருக்கும் ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்டிட உறுதியோடு துணை நின்ற, மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், மாண்புமிகு முன்னாள் முதல்வர்; கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களுக்கும், மத்திய அரசின் விலங்குகள் நல வாரிய மற்றும் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் டாக்டர்.எஸ்.கே. மிட்டல் அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக கூபா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தபோது, நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டிட பல்வேறு அமைப்புகள் மனு தாக்கல் செய்தன; என் தரப்பு வாதங்களையும் பதிவு செய்ய நானும் இடையீட்டு மனு ஒன்றை கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் தாக்கல் செய்தேன். இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது நேரடியாக டெல்லி சென்று ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் அண்ணன் பி.ஆர் அவர்களுடன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை நடத்திய தருணங்கள் யாவும் நெஞ்சில் நிழலாடுகின்றன.

உச்ச நீதிமன்றத்தில் ஆணித்தரமாக நம் உணர்வுகளை பிரதிபலித்த ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் விழாக்குழுவினர் மனுவுக்கு ஆஜரான முன்னாள் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து அவர்களுக்கும், நான் தாக்கல் செய்த இடையீட்டு மனுவில் ஆஜராகி, "ஜல்லிக்கட்டு என்பது தமிழ் மண்ணின்; மக்களின் உதிரத்தில் கலந்திருக்கும் கலாச்சார பெருவிழா என்பதையும், இதனை தமிழக அரசு, இந்திய அரசு, ஏன் நீதி மன்றங்களும் ஏற்றுக்கொண்டு சட்டமாக்கிய பின்னரும்; பீட்டா போன்ற அமைப்புகள் எங்கோ அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அலுவலகங்களில் அமர்ந்துகொண்டு எங்கள் கலாச்சாரத்தை இவர்கள் எப்படி கேள்வி கேட்க முடியும்?"-  என உணர்வுப்பூர்வமாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் முத் ராஜ் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த அன்பை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டு நம் அடையாளம்; அதற்கு எத்தகைய தடை வரினும் அத்தனையையும் தகர்த்தெறிய உறுதியோடு களம் நின்ற அத்தனை அமைப்புகளுக்கும், வாதாடிய வழக்கறிஞர்களுக்கும், நம் உறவுகளுக்கும் என் இதயத்தின் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

இது நமக்கான வெற்றி... நம் மண்ணுக்கான வெற்றி... நம் மக்களுக்கான வெற்றி... மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம். #ஜல்லிக்கட்டு" என உணர்ச்சி பொங்க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijayabaskar tweet on the Supreme Court verdict on jallikattu act


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->