தமிழகம் முழுவதும் 268 வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
Vote Counting Centres
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ண தமிழகம் முழுவதும் 268 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற இருக்கிறது என்றும் அதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை உட்பட 21 மாநகராட்சிகளிலும் 15,158 வாக்குப்பதிவு மையங்களும், நகராட்சிகளில் 7,471 வாக்குப்பதிவு மையங்களும், பேரூராட்சிகளில் 8,454 வாக்குப்பதிவு மையங்களும் என மொத்தம் 31,209 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் ஒரு லட்சத்து 6,121 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் 55,337 கட்டுப்பாட்டு கருவிகளும் பயன்படுத்தப்பட இருப்பதாகவும், அவை தயார்நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், வேட்பாளர்களின் சின்னம் பொருத்தும் பணி அனைத்து இயந்திரங்களிலும் நிறைவு பெற்றுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்த இயந்திரங்களை பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்றும், பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு சென்னையில் 15 மண்டலங்களிலும் தலா ஒரு வாக்கும் எண்ணும் மையம் உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 268 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.