ராமேஸ்வரம் தீர்த்தக் கடலில் கழிவு நீர் கலப்படம்!...நகராட்சி கழிவுகள் என்ன செய்யப்படுகிறது?...மதுரை ஐகோர்ட்டு கிளை சரமாரி கேள்வி!
Waste water pollution in rameswaram thirtha sea what is being done with municipal waste madurai high court branch barrage of questions
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தளத்தில் ராவணனைக் கொன்ற பாவம் தீர ராமர் வழிபட்டார்.
காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு, காசி சென்று கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விசுவநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்து, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
இதன் மூலம் இந்த கோவில் இந்தியா முழுவதும் பிரபலமானதாக உள்ளது. இதனால், அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இதற்கிடையே, அக்னி தீர்த்தக் கடல் அருகே நகராட்சி கழிவுநீர் கடலில் கலக்கப்படுவதால், கடல் நீர் அசுத்தமாகிறது. இதனை தடுக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், அக்னி தீர்த்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுகள் எங்கே செல்கிறது? அவை மீண்டும் கடலில் கலக்கப்படுகிறதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மற்றும் கழிவுகள் என்ன செய்யப்படுகின்றது என்பது தொடர்பாக நகராட்சி ஆணையர் விசாரணை நடத்தி, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Waste water pollution in rameswaram thirtha sea what is being done with municipal waste madurai high court branch barrage of questions