ஏ.டி.எம். எந்திரத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி: பொதுமக்களை அதிர வைத்த வாலிபர்!
youth arrested trying robbery broken atm machine
ஈரோடு, வீரப்பன் சத்திரம் சத்தி சாலையில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் வளாகத்தில் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏ.டி.எம் மையத்திற்குள் கடந்த 5 ஆம் தேதி அதிகாலை நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விட்டு, ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.
அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் அங்கு வந்த மர்ம நபர் தப்பி சென்று விட்டார்.
எச்சரிக்கை மணி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பார்த்தபோது ஏ.டி.எம் எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கைரேகை நிபுணர்களின் உதவியுடன் ஏ.டி.எம் மையத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.
மேலும் ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த ரூ. 10 லட்சம் தப்பியது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீசார் சுற்றுவட்டார பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க முயன்றது ஈரோடு அசோகபுரம் பகுதியைச் சேர்ந்த ராகுல் (வயது 21) தொழிலாளி என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் நேற்றிரவு ராகுலை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். மேலும் ராகுல் மீது ஏற்கனவே திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
English Summary
youth arrested trying robbery broken atm machine