#புயல் எதிரொலி... தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை..! வானிலை ஆய்வு மையம்..!
Chance of heavy rain in 11 districts tamilnadu
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணி அளவில் "மோக்கா" புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும்.
அதன் பிறகு நாளை காலை முதல் வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு 13ஆம் தேதி மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை உயர்ந்து, 14ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை முதல் 15/05/2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை பொருந்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Chance of heavy rain in 11 districts tamilnadu