உதகை - கனமழை எதிரொலி : ரயில்வே காவல் நிலையத்திற்குள் புகுந்த மழைநீர்!
Heavy Rain in Ooty
கடந்த ஒரு மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தற்போது நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் க்ரீன்பீல்டு, லோயர் பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மேலும் உதகையில் கமர்ஷியல் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. அங்குள்ள மார்க்கெட் பகுதியில் புகுந்த மழைநீரில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மேலும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை ரயில் நிலைய பாலத்திலும் மழைநீர் நிறைய தேங்கியிருந்தது. இதனால் தண்ணீர் இறங்கும் வரை அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து உதகை ரயில்வே காவல் நிலையத்திற்குள்ளும் வெள்ளநீர் சூழ்ந்தது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், காவல் நிலையத்திற்குள் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் வெளியேறி விட்டனர். இதையடுத்து இனி காவல் நிலையத்திற்குள் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் பாட்னா ஹவுஸ் செல்லும் வழியில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து அங்கு போக்குவரத்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது. மேலும் இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக உதகையில் 52.4 மி. மீ. மழையும், பந்தலூரில் 98 மி. மீ. மழையும் பதிவாகியுள்ளது.