திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம்: கலெக்டர் வேண்டுகோள்!
Tiruchendur Collector urges devotees not to visit temple
மழை வெள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 14 மற்றும் 15-ம் தேதி என 2 நாட்கள் வெளியூரில் இருந்து பொதுமக்கள் வரவேண்டாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை காணப்பட்டது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது, மேலும் வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 2 நாட்களில் நகரும். இதன்காரணமாக, நாளை (திங்கட்கிழமை) ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புகள் உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ளநீர் வந்து கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் செல்வதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்தை சீர்செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மழை வெள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு 14 மற்றும் 15-ம் தேதி என 2 நாட்கள் வெளியூரில் இருந்து பொதுமக்கள் வரவேண்டாம் என தெரிவித்துள்ளார்.
English Summary
Tiruchendur Collector urges devotees not to visit temple