நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் சூறாவளி - 3 பேர் பலி
3 killed as Cyclone Gabrielle lashes Newzealand
பசிபிக் நாடான நியூசிலாந்தின் வடக்கு மாகாணங்களை தாக்கிய சக்தி வாய்ந்த கேப்ரியல் புயலால் ஆக்லாந்து, நார்த்லேண்ட், ஓபோடிகி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டிதீர்த்தது. புயலால் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதால் வீடுகளின் மேல் கூரைகள் தூக்கி எறியப்பட்டன. மேலும் மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாயந்தன.
இதையடுத்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முதியவர்கள், சிறுவர்கள் உட்பட 2500 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொலைத்தொடர்பு சாதனங்கள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் 2,25,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்தை தாக்கிய கேப்ரியல் சூறாவளியில் 3 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இருவரின் உடல்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹாக்ஸ் பே பிராந்தியத்தில் மீட்கப்பட்டதாக அவசரகால மேலாண்மை அமைச்சர் கீரன் மெக்அனுல்டி தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை தேடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து பேரிடர் மேலாண்மை மீட்டுக் குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கிழக்கு மற்றும் மத்திய நியூசிலாந்து பகுதியில் நாளை வரை கனமழை தொடரும் என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
3 killed as Cyclone Gabrielle lashes Newzealand