இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் மூன்றாம் சார்லஸ்..!!
Charles 3rd crowned as King of United Kingdom
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். அவரது அதிகாரபூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
உலக தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் லண்டனில் நடைபெறும் முடிசூட்டு விழாவிற்கு குவிந்தனர். வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை வண்ண மிகு ஊர்வலத்தில் மன்னர் சார்லசும், அவரது மனைவியும், ராணியுமான கமீலாவும் முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.
மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தைச் சென்றடைந்ததும் முறைப்படி மன்னர் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. 700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின் நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லசை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பி ராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது.
அதன் பிறகு மன்னர் 3-ம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார். உறுதிமொழி எடுத்ததும் மன்னரின் தலை மற்றும் உடல் பகுதியில் புனித எண்ணை தேய்த்து அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மதம் மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரத்தை அளிக்கும் வகையில் அரச குடும்ப புனித உருண்டை அவருக்கு அளிக்கப்பட்டது.
மூத்தமதகுருமார்கள் புனிதப்படுத்தப்பட்டு ஆசிர்வதிக்கப்பட்ட பிறகு மன்னர் சார்லசுக்கு செங்கோல் வழங்கப்பட்டு ஆர்ச் பிஷப் அவரது தலையில் புனித எட்வர்ட்டின் கிரீடத்தை சூட்டி தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனத்தில் அமர வைத்தார். அவரது மனைவி கமீலா சார்லசுக்கும் கிரீடம் சூட்டப்பட்டது. இந்த கிரீடம் 1953-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 முக்கிய தலைவர்கள், 203 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் மற்ற நாடுகளின் அரச குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்திய அரசின் சார்பில் பங்கேற்க துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் மற்றும் அவரது மனைவி டாக்டர் சுதிப் தன்கருடன் கலந்து கொண்டார். இந்த விழாவில் இந்து, சீக்கியம், முஸ்லீம், புத்தமதம், ஜெயின் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
English Summary
Charles 3rd crowned as King of United Kingdom