துணை பிரதமர் ராஜினாமா.. ஜஸ்டின் ட்ரூடோ அதிர்ச்சி.. தப்புமா கனடா அரசு?
Deputy Prime Minister resigns Justin Trudeau shocked Is the Canadian government wrong
கனடா நாட்டின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கனடா தற்போது ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப், சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் இறக்குமதி ஆகும் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். கனடாவில் இருந்து சுமார் 75 சதவீத ஏற்றுமதி வர்த்தகம் அமெரிக்காவுடன் மட்டுமே நடைபெறும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு கனடாவின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கனடா நாட்டின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதோடு, நிதி மந்திரி பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கனடா தற்போது ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் எதிர்காலம் தொடர்பான திட்டங்களில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும், தனக்கும் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை வேறு இலாகாவிற்கு மாற்ற வேண்டும் என்றும் விரும்பியதாக குறிப்பிட்டுள்ள அவர், ஜஸ்டின் ட்ரூடோவின் மந்திரிசபையில் இருந்து விலகுவதே நேர்மையான மற்றும் சாத்தியமான ஒரே வழி என்று முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். அதோடு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கிறிஸ்டியா பிரீலேண்ட் கூறியுள்ளார். முன்னதாக கனடா அரசின் வீட்டு வசதி துறை மந்திரி சீயன் பிரேசர் நேற்று ராஜினாமா செய்தார்.
கடந்த செம்ப்டம்பர் மாதம் முதல் கனடாவில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியரி பாய்லெவ்ரே இதுவரை 3 முறை ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கான ஆதரவு கணிசமாக குறைந்து வருவதாக கருத்து கணிப்புகள் கூறி வரும் நிலையில், தற்போது துணை பிரதமர் ராஜினாமா செய்திருப்பது ட்ரூடோ அரசுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
English Summary
Deputy Prime Minister resigns Justin Trudeau shocked Is the Canadian government wrong