"நான் இறந்திருக்க வேண்டியவன்" - துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின் ட்ரம்ப்பின் முதல் பேட்டி..!!
Donald Trump Gives Interview After Gun Shot Incident
கடந்த சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தப்பி பிழைத்த பின்னர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஊடகங்களுக்கு மிக உருக்கமாகப் பேட்டியளித்துள்ளார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) அன்று அமெரிக்க முன்னாள் அதிபரும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் கூட்டத்தினரிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இதை எதிர்பாராத ட்ரம்ப், தலையை கீழே குனிந்துள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்ட கூட்டத்தினரும் கீழே குனிந்துள்ளனர். இதையடுத்து துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டா, மேடையில் இருந்த டொனால்ட் ட்ரம்பின் வலது பக்க காதினை உரசிச் சென்றுள்ளது.
இதில் அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் அமெரிக்க அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபரின் மீதான இந்த கொலைத் தாக்குதல் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நூலிழையில் உயிர் தப்பிய ட்ரம்ப், தாக்குதலுக்குப் பிறகு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "கடவுளோ, அல்லது என் அதிர்ஷ்டமோ தான் என்னைக் காப்பாற்றியுள்ளது. நான் எப்படி சரியான நேரத்தில் என் தலையை திருப்பினேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் இறந்திருக்க வேண்டியவன். ஆனால் ஏதோ ஒன்றினால் நான் காப்பாற்றப்பட்டு விட்டேன்" என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
English Summary
Donald Trump Gives Interview After Gun Shot Incident