நீரில் மிதக்கும் பாகிஸ்தான்....சரியும் மக்கள்தொகை..!
Pakistan floating in water....Decreasing population
பாகிஸ்தானில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து கனமழை பெய்து வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்து வரும் மழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 33 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5,12,275 பேர்
மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 4,98,442 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளதால், காயம் அடைந்த 1,527 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 119 பேர் உயிரிழந்தும், 71 பேர் காயமடைந்தும் உள்ளனர். அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 76 பேர், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 31 பேர், கில்ஜித் பல்டிஸ்தானில் 6 பேர், பலோசிஸ்தானில் 4 பேர் இறந்துள்ளனர்.
நாடு முழுவதும் 9,49,858 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவும் சேதமடைந்துள்ளது. அதில், 6,62 446 வீடுகளில் ஒரு பகுதி மட்டும் சேதமடைந்துள்ளது. 287,412 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 7,19,558 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
149 பாலங்கள் முற்றிலும் இடிந்தது. இதுவரை 3,452 கி.மீ., சாலைகள் சேதம் அடைந்தும் உள்ளது. மழையில் 170 கடைகள் நொறுங்கியுள்ளன. மழை வெள்ளத்தால் 110 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதில் 72 மாவட்டங்களுக்கு பேரிடர் கால அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு தேசிய பேரிடர் மீட்பு படையின் தகவலின்படி, கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 134 மி.மீ., மழை பெய்துள்ளது. ஆனால், இந்த வருடம் மட்டும் 388.7 மி.மீ., மழை பதிவாகியது. இது கடந்த ஆண்டுகளை விட 190.07 சதவீதம் அதிகமாகும்.
இதைத்தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேரழிவு காரணமாக, பாகிஸ்தானில் மழை அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளதாக தெரிவித்தார்.
English Summary
Pakistan floating in water....Decreasing population