தமிழர்களுடனான நல்லிணக்க கொள்கையை விரைவுபடுத்த அதிபர் ரணில் உத்தரவு...!
President Wickramasinghe ordered to speed up reconciliation plans with Tamils
இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் மஹிந்தா ராஜபக்சேவின் ஆட்சியின் போது பிரிவினைவாத நோக்கத்தில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு கடும் அநீதி இழைக்கப்பட்டது. மேலும் பல்வேறு சட்டங்களால் இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பத்திற்கு பின் இலங்கையின் அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்தார்.
இந்நிலையில் இலங்கையின் சிங்களர்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு மற்றும் உரிமைகளை வழங்கும் 13 வது சட்ட திருத்தத்தை அமல் படுத்துவதற்கான முயற்சிகளை இலங்கை அதிபர் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழர்களுக்கான தேசிய நிலச்சபை நிறுவுதல், தேசிய நிலக்கொள்கை உருவாக்குதல், நல்லிணக்க ஆணைக்குழுவை அமல்படுத்துதல் போன்ற திட்ட செயல்முறைகள் ஆலோசிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து அதிகார பரவலாக்கும், கைதிகள் விடுதலை, சட்டம் வகுத்தல் தொடர்பாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இலங்கை அதிபர் ஆய்வு செய்தார். இதையடுத்து தமிழர்களுடான நல்லிணக்க செயல்திட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான தேசிய கொள்கையை விரைவாக உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காணாமல் போனவர்களுக்கான சான்றிதழ் வழங்குதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அலுவலக செயல்பாடுகளை குறித்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தினார். மேலும் இலங்கை தமிழர்களின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் நிவாரண அலுவலகம் அமைப்பதை 2 மாதத்திற்குள் முடிக்க சம்பந்தப்பட்ட துறைகளிடம் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
English Summary
President Wickramasinghe ordered to speed up reconciliation plans with Tamils