நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவிற்கு உலக சுகாதார அமைப்பு தலைவர் பயணம்..!!
World Health Organization chief visits earthquake hit Syria
துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை நகரங்களில் ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
இந்த நிலநடுக்கத்தில் சிரியா மற்றும் துருக்கியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது. இதில் துருக்கியில் 17,674 பேரும், சிரியாவில் 3,377 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி - சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக துருக்கிக்கு 1.78 பில்லியன் அமெரிக்க டாலர்களை உலக வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று சிரியா செல்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நான் சிரியாவுக்குச் செல்கிறேன், அங்கு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சுகாதாரப் பாதுகாப்புக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
World Health Organization chief visits earthquake hit Syria