பகலில் தச்சு தொழில், இரவில் கொள்ளை: இரட்டை வேடங்களில் உலாவிய வாலிபர் கைது!ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு!
Carpentry during the day robbery at night Youth arrested for double crossing Jewels worth Rs 7 lakh recovered
புதுச்சேரி காரைக்கால் பகுதியில் எல்லைப்பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் பைக்கில் வந்த ஒருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் முன்னும் பின்னும் முரண்படுவதாக பேசியதால், அவரை கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர்.
விசாரணையில், அவர் பூம்புகாரை சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் (34) என தெரியவந்தது. தச்சுத் தொழில் செய்யும் சிவானந்தம், முதலில் தன்னை அப்பாவியாக காட்ட முயன்றார். ஆனால், அவரது செல்போனை சோதித்த போது, கடந்த டிசம்பர் 10 மற்றும் ஜனவரி 14 ஆகிய தேதிகளில் அவர் காரைக்காலுக்கு வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதே நாள்களில் காரைக்காலில் 2 வீடுகளில் கொள்ளை நடைபெற்றது. மேலும், அவரது செல்போன் டவர் தகவல்கள் அந்த வீடுகளின் அருகே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர் விசாரணையில், சிவானந்தம் அந்த 2 வீடுகளில் நகை திருடியது ஒப்புக்கொண்டார். அவர் கொள்ளையடித்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை உருக்கி, தனது வீட்டுத் தோட்டத்தில் புதைத்துவைத்ததாக தெரிவித்தார்.
இதேபோல், அவர் மயிலாடுதுறையில் 4 வீடுகளில் கொள்ளையடித்ததாகவும், மேலும் ஒரு கொலை வழக்கிலும் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
பகலில் தச்சு வேலை செய்யும் அவர், வீட்டின் பாதுகாப்பு நிலையையும் உள்ளமைப்பையும் கவனித்து விடுகிறார். இரவில் மதுவில் மயங்கியபோது, நோட்டமிட்ட வீடுகளில் கொள்ளை அடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை போலீசார் இணைந்து அவர் தொடர்புடைய அனைத்து வழக்குகளிலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சினிமா கதாநாயகனை போல பகலில் தச்சு தொழிலாளியாகவும், இரவில் வீடு புகும் கொள்ளையனாகவும் இரட்டை வேடங்களில் உலாவி வந்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த கோட்டுச்சேரி போலீசார் உருக்கிய நகைகளை மீட்டனர்.
English Summary
Carpentry during the day robbery at night Youth arrested for double crossing Jewels worth Rs 7 lakh recovered