அஜித் ரசிகர் உயிரிழப்பு.. அஜித், விஜய் மற்றும் திரையங்கு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு?
Ajith fan death case filed on actors and theatre owner
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான அஜித்குமார் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
அஜித் குமார் நடித்த துணிவு படத்தையும், விஜய் நடித்த வாரிசு படத்தையும் அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு அஜீத் ரசிகர்களுக்கான துணிவு படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. அதேபோன்று விஜய் நடித்த வாரிசு திரைப்படத்திற்கான சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் துணிவு படம் பார்க்க சிந்தாதிரிப்பேட்டை அடுத்த ரிச்சி தெருவை சேர்ந்த பரத்குமார் சென்றுள்ளார். அப்பொழுது பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரியின் மீது ஏறி நடனமாடியுள்ளார். இதில் அவர் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வக்குமார் என்பவர் மாநகர காவல் ஆணையருக்கு இணையவழியில் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நடிகர்கள் விஜய், அஜித் மற்றும் திரையரங்கு உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் 'கடந்த 11ம் தேதி நடிகர் விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியது. அப்போது அஜித் விஜய் இருவரின் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இது மோதல், பிரச்சனையை உருவாக்கும் வகையில் உள்ளது.
அதன் காரணமாக நடிகர்கள் விஜய், அஜித் மீது இருபிரிவின் இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திரையரங்கு வளாகத்தில் கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளித்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யமால் அலட்சியமாக இருந்த அதன் உரிமையாளர் மீது மரணம் விளைவித்தல் குற்றத்துக்கான பிரிவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Ajith fan death case filed on actors and theatre owner