இப்படி கொச்சைப்படுத்திப் பணம் சேர்க்க வேண்டுமா? மகான் படத்துக்கு கடும் கண்டனத்தை விடுத்த இயக்கம்.! - Seithipunal
Seithipunal


மகான்' திரைப்படத்துக்கு காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரமும், அவரது மகனும் இணைந்து நடித்துள்ள 'மகான் ' படத்தை நான் பார்க்கவில்லை. இந்தப் படம் காந்தியத்தைக் கொச்சைப்படுத்தப்படுவதாக, அறிவார்ந்த பலர் என்னிடம் சொல்லி மனம் வருந்தினர். 

இந்தப் படம் சார்ந்த இயக்குனருக்கும், தங்கள் பங்களிப்பைத் தந்த பிற கலைஞர்களுக்கும், 'நாய் விற்ற காசு கைக்கு வந்தால் போதும்' என்பதற்கு மேல் எந்தச் சிந்தனையும் இருப்பதற்கு நியாயமில்லை. 'கருவாடு விற்றுப் பெற்ற பணம் நாறவா போகிறது' என்று யோசிக்கப் பழகியவர்களிடம் ஒரு சமூகத்தையே புரட்டிப் போடும் புரட்சிகரமான கலைப் படைப்பையா நாம் எதிர்பார்க்க முடியும்?

நாங்கள் கலைச்சேவை செய்ய வரவில்லை என்று கூச்சமற்றுப் பிரகடனம் செய்யும் 'மகான்கள்' இவர்கள். எப்படியாவது மக்களை மலினமான மயக்கங்களில் ஆழ்த்தி, அவர்களுடைய அடிமனத்தில் உறங்கிக் கிடக்கும் மன்மத உணர்வுகளை உசுப்பிவிட்டு, வன்முறைக் கலாசாரத்தை வளர்த்தெடுத்துக் காசு பறிப்பதையே தங்கள் வாழ்வியலாகக் கொண்ட இந்த நவீன நடிப்புச் சுதேசிகளிடம் உயர்ந்த கலைப் படைப்புகளை எப்படி நாம் எதிர்பார்க்க முடியும்?

காந்தியம் என்பது பின்பற்ற முடியாத ஒரு வறட்டுத் தத்துவம் இல்லை. அது ஓர் அற்புதமான நடைமுறை வாழ்வியல் என்பதைக் கார்த்திக் சுப்புராஜோ, நடிகர் விக்ரமோ அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

உயர் ஒழுக்கங்களையும், நற்பண்புகளையும், புலனடக்கத்தையும், சக மனிதர்களின் நலன் குறித்த சிந்தனைகளையும், சமத்துவத்தையும் பெரிதாகப் போற்றி வாழ்பவர்களே காந்தியைப் பின்பற்ற முடியும். சினிமாக் கலைஞர்கள் செல்வத்தைக் குவிக்கவும், மனம் போன போக்கில் இன்புற்று வாழவும், பொய்யான விளம்பர வெளிச்சத்தில் பூரித்துப் போகவும் கலைச்சேவை செய்ய வந்தவர்கள். இதில் விதிவிலக்காகச் சிலர் இருக்கக்கூடும். விதிவிலக்குகள் பொது விதியாவதில்லை.

காந்தி வலியுறுத்திய கொள்கைகளில் மதுவிலக்கு என்பது மிகவும் முக்கியமானது. மதுவிலக்கு என்பது காந்தியத்தின் உயிர்த்தலம். ஏழ்மையின் கொடிய பிடியிலிருந்து வறியவர்களை மீட்டெடுப்பதற்காக வாழ்நாள் முழுவதும் மதுவுக்கு எதிராகப் போராடியவர் மகாத்மா. 1930-இல் நடந்த சட்டமறுப்புப் போரை முடிவிற்குக் கொண்டுவர காந்தி-இர்வின் ஒப்பந்தம் உருவானபோது, கள்ளுக்கடை மறியலை மட்டும் கைவிட மறுத்தவர் காந்தி என்பதையும், அதை வேறுவழியின்றி வைஸ்ராய் இர்வின் ஏற்றுக் கொண்டதையும் மகான்கள் சுப்புராஜும், விக்ரமும் அறிவார்களா? 

சிறிதளவாவது சமூகப் பொறுப்புணர்வு இருந்திருந்தால் சுப்புராஜ் மகான் படத்தை இயக்கியிருப்பாரா? 

பிதாமகன், சேது, காசி போன்ற படங்களில் தன் அளப்பரிய நடிப்பாற்றலை வெளிப்படுத்திய விக்ரம் இந்தப் படத்தில் நடிக்க இசைந்திருக்கலாமா? 

பணம்தான் இவர்களது ஒற்றை நோக்கமா?

அக்காலம் தமிழ்த் திரையுலகின் பொற்காலம். ஆனால் இன்று? பேட்டை ரௌடியாகவும், பாலியல் பிறழ்ந்த காமுகனாகவும், எல்லாவித இன்பங்களையும் மனச்சான்றின் உறுத்தலே இல்லாமல் அனுபவிக்கத் துடிக்கும் விடலையாகவும் நம் இளைஞர்களை மாற்றும் சீரழிந்த படங்களே பெரும்பாலும் சமூகத்தை முற்றுகையிடுகின்றன. பணம் சம்பாதிக்க நல்ல வழியில்லையா? நோய் தீர்க்கும் மருந்து விற்பவரும், பசி தீர்க்கும் அரிசி விற்பவரும் ஒரு வகை. உயிர் கெடுக்கும் கஞ்சா விற்பதும், சாராயம் விற்பதும் வேறுவகை இல்லையா? மகான் படம் எடுத்தவர்களுக்கும், மராட்டியத்தில் கோட்சேவை வழிபடு நாயகனாக வடிவமைத்து நாடகம் நடத்துபவர்களுக்கும் பெரிய வேற்றுமை இல்லை" என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilarumaniyan say about mahan movie


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->