குளிர்காலங்களில் குளிரை தாங்க, வீடுகளில் பயன்படுத்திய அருமருந்தை மறந்து போன தமிழர்கள்! பாரம்பரியம் காப்போம்!
iluppai maram
இலுப்பை இன்று அதிகபடியான பயன்பாட்டில் இருந்து பெருமளவு மறைந்து போன பெயர். கோவில் கதவுகள், அரண்மனை கதவுகள் எல்லாம் இலுப்பை மரத்தினால் செய்யப்பட்டவையே. நல்ல திறன் வாய்ந்த தச்சர்களால் செய்யப்பட்ட கதவுகள் மூடப்பட்ட பின் தண்ணீர் கசிவை கூட வெளியே விடாத அளவுக்கு பலம் வாய்ந்தவை. ஒரு கோட்டையின் கதவுகளாக இரும்பு பூண் போட்டு நிறுத்தப்படும்போது யானைகளால் கூட மோதி உடைக்க முடியாதவை.
இலுப்பை வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணையே கோவில்களில் பெரும்பாலும் அன்றாட பயன்பாட்டில் இருந்தது. இலுப்பை நெய் என்றே சொற்பிரயோகம். கொஞ்சம் சூடு படுத்தியே பயன்படுத்தமுடியும். குளிர்காலங்களில் வீட்டினுள் இலுப்பை எண்ணை ஊற்றி விளக்கு ஏற்ற வீட்டினுள் இதமான சூடு பரவும்.
விளக்கில் சூடேறும் எண்ணையை மூட்டுகளில் கை கால்களில் வலி உள்ளோர் எடுத்து தொடர்ந்து தேய்த்து வர குணமேற்படுவதை காணலாம். சொறி, சிரங்கு, தேமல் உள்ளோர் இலுப்பை பிண்ணாக்கை குளிப்பதற்கு முன் உடலில் தேய்த்து ஊற,சிறிது நேரம் கழித்து குளித்து வர, குணமடைவதை காணலாம். காற்றை சுத்திகரிப்பதில் பெரும்பங்கு வகிப்பது இலுப்பை மரம் சூழலுக்கு மிகவும் இதமானது .
இவையெல்லாம் எந்த வித ஆராய்ச்சியும் செய்து நிரூபிக்கப்படாதவை. எந்த மருத்துவராலும் பரிந்துரைப்பதில்லை. முன்னோர்களின் தொடர் வழிகாட்டல் மூலமாகவே பாரம்பரிய அறிவின் மூலம் பயன்படுத்தபடுகிறது. இலுப்பை பயன்படுத்த நினைத்தாலும் முடியாத அளவிற்கு இலுப்பை மரங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதும் மறுக்க முடியாது.
படங்களுடன், கட்டுரை : வரலாற்று ஆய்வாளர் பராந்தகன் தமிழ்செல்வம்.