மருத்துவ கலந்தாய்வு ஆரம்பம் - யாருக்கு? எப்போது?
post graduate medical course counselling starts from today
மருத்துவ கலந்தாய்வு ஆரம்பம் - யாருக்கு? எப்போது?
நாடு முழுவதும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இணையதளத்தில் நடத்தபட்டு வருகிறது. இந்தக் கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு நடத்துகிறது.
இதற்கிடையே, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு நடப்பாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வுக்கும், மாநில கலந்தாய்வுக்கும் விண்ணப்பித்தவர்களில் கடந்த ஆண்டு இடங்கள் பெற்று கல்லூரிகளில் சேராதவர்கள் உள்ளனரா? என்று தேசிய தேர்வு வாரியத்திடம் தகவல் கோரப்பட்டது.
அதன் படி ஆய்வு நடத்திய தேசிய தெரு வாரியம் 47 பேர் அவ்வாறு உள்ளதாக தகவல் தெரிவித்தது. உடனே எம்சிசி அவர்கள் நடப்பாண்டில் கலந்தாய்வில் பங்கேற்க தடை விதித்தது.
இதுதொடர்பாக மருத்துவக் கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 27-ம் தேதி அதாவது இன்று தொடங்குகிறது.
இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை பதிவு செய்யவேண்டும். அன்று இரவு 8 மணி வரை கட்டணம் செலுத்தலாம். ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 2-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை மாணவர்கள் இடங்களை தேர்வு செய்யலாம். ஆகஸ்ட் 3, 4-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான விவரங்கள் 5-ம் தேதி வெளியிடப்படும்.
மாணவர்கள் தங்களுடைய சான்றிதழ்களை 6-ம் தேதி அன்று பதிவேற்றம் செய்து 7 முதல் 13-க்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும். மாணவர்களின் விவரங்களை ஆகஸ்ட் 14 முதல் 16 வரை கல்வி நிறுவனங்கள் சரிப்பார்த்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 17-ம் தேதியும், 3-ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 7-ம் தேதியும், இறுதியாக காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதியும் தொடங்கவுள்ளது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
post graduate medical course counselling starts from today