12 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி! மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.! - Seithipunal
Seithipunal


12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத் துறை அமைச்சர் தொடஙகி வைத்தார்.

மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர்  இன்று 12 வயது  முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோர்பேவேக்ஸ் கோவிட் தடுப்பூசி (CORBEVAX)  செலுத்தும் பணியினை தொடங்கி வைத்தனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு 135க்குட்பட்ட அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களும் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை இன்று தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது :

தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசியானது முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடன் கூடிய மூத்த குடிமக்களுக்கும் செலுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கும் செலுத்தப்பட்டது.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்துவதை ஒரு பேரியக்கமாக மாற்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டார்கள்.  அதனடிப்படையில், மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு அவர்களின் இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேலும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த ஜனவரி மூன்றாம் தேதி முதல் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.  இதுவரை 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களில் 84.15% முதல் தவணை தடுப்பூசியும், 56.24% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கிய மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
தொடர்ந்து, ஒன்றிய அரசு இன்று முதல் 12 வயது முதல் 14 வயதுடைய சிறார்களுக்கும் Corbevax கோவிட் தடுப்பூசி செலுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது.  

அதனடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள 12 முதல் 14 வயதுடைய 21,21,000 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இன்று அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பெருமளவு குறைந்து பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் முழு ஒத்துழைப்போடு சிறார்களுக்கு இந்தத் தடுப்பூசி விரைந்து செலுத்தப்படும்.  சிறார்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பின்னரே தடுப்பூசி செலுத்தப்படும். 

60 வயதை கடந்த அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை  தடுப்பூசியையும் இன்று முதல் செலுத்தலாம் எனஅத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.   

அதனடிப்படையில் அரசு, மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் 60 வயதிற்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களை கடந்த அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.  

இன்றைய நிலவரப்படி 60 வயதிற்கு மேற்பட்ட 1,04,19,000 நபர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார்.  

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு 50% இட ஒதுக்கீடு வழங்கலாம் என மாண்புமிகு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முயற்சிக்கும் சமூக நிதிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவிட் தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவிட் தடுப்பூசி என்பது அனைத்து தரப்பினருக்கும் அவசியமாகிறது. 

15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகளின் வாயிலாக இந்தத் திட்டத்தினை செயல்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி, அதனை அவரே நேரடியாக வந்து சைதாப்பேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இதில் 33,46,000 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 28,15,733 சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 18,81,888 சிறார்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது, 12 வயது முதல் 14 வயதுடைய சிறார்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை தொடங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் இன்று அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

12 வயது முதல் 14 வயதுடைய சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் பள்ளிக் கல்வித்துறை முழு ஒத்துழைப்பை வழங்கி இலக்கினை விரைந்து எய்திட உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி ஆர்.பிரியா, துணை மேயர் திரு. மு.மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.த.வேலு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி சாந்தி  அவர்கள்,  திரு.கே.ஏழுமலை அவர்கள், திரு.ராஜா அன்பழகன் அவர்கள், திரு.ப. சுப்பிரமணி அவர்கள், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மார்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaccination for age twelve to fourteen


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->