நாட்டின் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள ரயில்வே வினாத்தாள் மோசடி; 26 அதிகாரிகள் கைது..!
26 officials arrested for involvement in railway question paper fraud
கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்தது. இந்த தேர்வை ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் எழுதி பதவி உயர்வு பெற முடியும். குறித்த தேர்வுக்கான வினாத்தாளை கசியவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு முதல் சராய் பகுதியில் 03 இடங்களில் அவர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதில் 17 பேர், கையால் எழுதப்பட்ட ரெயில்வே தேர்வு வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டுள்ளனர்.
இவ்வாறு பிடிப்பட்ட அனைவரும் ரெயில்வேயில் இளநிலை லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணிபுரிபவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அத்துடன், அவர்கள் பணம் கட்டி வினாத்தாள் நகல்களை மோசடியாக பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், இவர்களுக்கு வினாத்தாள்களை வினியோகித்ததாக மேலும் 09 ரெயில்வே அதிகாரிகள் பிடிபட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரி மற்றும் வினாத்தாளை தயாரிக்கும் அதிகாரியான, மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் கைப்பட ஆங்கிலத்தில் வினாக்களை எழுதி ஒரு என்ஜின் டிரைவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் இந்தி மற்றும் வேறு சில மொழிகளிலும் வினாத்தாள்களை தயாரித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்துள்ளார். இதனால் மண்டல முதுநிலை பொறியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து 08 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில், ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வினாத்தாள் விற்பனைக்காக வசூலிக்கப்பட்ட தொகை என்று தெரிய வந்துள்ளது.
அத்துடன் வினாத்தாள் மோசடியில் பிடிபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாளும், நேற்று நடந்த அசல் தேர்வு வினாத்தாள் கேள்விகளும் பொருத்தமாக இருப்பது ஒப்பிடப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது. இதை புகாரில் முக்கிய சான்றாக இணைத்து உள்ளனர். இந்த வினாத்தாள் மோசடி சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
26 officials arrested for involvement in railway question paper fraud