80 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு ஆசை; எதிர்ப்பு தெரிவித்த மகனை சுட்டுக்கொன்ற முதியவர்..!
An elderly man wanted a second marriage at the age of 80 shot and killed his son objected
இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 52 வயது மகனை, 80 வயது தந்தை சுட்டுக் கொன்று, மருமகளையும் சுட முயன்ற சம்பவம் குஜராத்தில் இடம்பெற்றுள்ளது. குஜராத் போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் 80 வயதான ராம்பாய் பொரிச்சா. இவரது மனைவி, 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
அன்றிலிருந்து, தனக்கு இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும் என குடும்பத்தினரை ராம்பாய் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், வயது மூப்பு காரணமாக மகன் பிரதாப், மருமகள் ஜெயா, பேரன் ஜெய்தீப் ஆகியோர், பெரியவரின் எண்ணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

அத்துடன், குடும்ப அந்தஸ்து, மானம், மரியாதை போன்ற காரணங்களை கூறி, தந்தையின் எண்ணத்திற்கு மகன் பிரதாபும் முட்டுக்கட்டை போட்டுள்ளார். இதனால், ராம்பாய்க்கு அடிக்கடி கோபம் வந்துள்ளது. அந்த நேரங்களில், 'எனக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், அனைவரையும் சுட்டுக் கொன்று விடுவேன்' என கூறி மிரட்டி வந்துள்ளார்.
ஆனால், அதை வெறும் மிரட்டல் என்று கருதி குடும்பத்தினர் ராம்பாயின் வார்த்தைகளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அத்துடன், தன் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் தனியாக வசித்த அந்த பெரியவர், சமீபத்தில், மகன் பிரதாபை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
துப்பாக்கியால் சுடும் சத்தம் மற்றும் கணவரின் அலறல் சத்தம் கேட்டு, பெரியவர் தங்கியிருந்த அறை கதவை பலமாக தட்டிய மருமகளையும் அவர் சுட முயன்றுள்ளார். மருமகள் அச்சமடைந்து, பக்கத்து அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலை அடுத்து அங்கு வந்த போலீசார், மகனின் சடலம் அருகே துப்பாக்கியுடன் கோபாமாக நின்றிருந்த 80 வயது தந்தையை கைது செய்துள்ளனர். போலீஸாரின் விசாரணையின் போது 'இரண்டாவது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மகன் பிரதாபை சுட்டுக் கொன்றுவிட்டேன். அவன் பல விதங்களில் என்னை தொந்தரவு செய்து வந்தான்' என வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
An elderly man wanted a second marriage at the age of 80 shot and killed his son objected