சர்ச்சை பேச்சு: போராட்டத்தை அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க கோரி அதிமுக சார்பில் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில்,  "தமிழ்ப் பண்பாட்டில் பெண்களுக்கு அளித்து வரும் மாண்பும், மகத்துவமும் அளவிட முடியாதவை. வியப்புக்குரிய படைப்பாய், தன்னையே முழுமையாக அர்ப்பணித்து உலகம் இயங்க உந்து சக்தியாய் வாழ்பவர்கள் பெண்கள். அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய்த் திகழ்பவர்கள் பெண்கள்.

இத்தகைய போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரிய பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில், விடியா திமுக அரசின் வனத் துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சைவ மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி பெண்களை எவ்வளவு கொச்சையாக பேசமுடியுமோ, அந்த அளவுக்கு கொச்சைப்படுத்திப் பேசி இருக்கிறார். ஒரு மனிதனின் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அவருடைய பேச்சில் வெளிப்பட்டிருக்கிறது.

தமிழ் நாட்டினுடைய அரசியல் மேடைகளில் நாகரிகத்தை முழுமையாக அழித்து, அநாகரிகத்தைப் புகுத்தி வளர்த்த கட்சி என்றால் அது திமுக. அந்தக் கட்சியினுடைய பல பேச்சாளர்கள் அரசியல் தலைவர்களை மட்டுமின்றி, மிகமிக அநாகரிகமாக பெண்களையும், சமயங்களையும், பல்வேறு சமய நம்பிக்கை கொண்ட மக்களையும் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி பேசி வருகிறார்கள்.

இதில், அந்த நாளாந்தரப் பேச்சாளர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அமைச்சர் பொன்முடி வக்கிரத்தின் உச்சிக்கே சென்று பேசியிருக்கின்ற இந்த இழிவான கருத்துகள், தமிழ் நாட்டு மக்களின், குறிப்பாக பெண்களின் நெஞ்சங்களில் நெருப்பைக் கொட்டி இருக்கிறது. பொன்முடியின் இத்தகைய கீழ்த்தரமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திமுக-விற்கு, அதனுடைய வரலாறு முழுவதும் இப்படியான அநாகரிகமான நடவடிக்கைகள் பழகிப்போனது தான் என்றாலும், தமிழ் நாட்டு மக்கள் ஒருநாளும் இந்த அருவருப்பான வக்கிர சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதிலும் குறிப்பாக, பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர். அவரது அநாகரிகமான பேச்சு பொதுமக்களிடையே மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

தமிழ் நாட்டினுடைய பண்பாட்டை, அரசியல் நாகரிகத்தை, மேடை நாகரிகத்தை அசிங்கப்படுத்தியும்; பெண்களின் மனங்களையும், மக்களின் மனங்களையும் புண்படுத்தியும், கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசி இருக்கின்ற விடியா திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்தும்; தமிழ் நாட்டில் இத்தகைய அநாகரிக அரசியலுக்கு இடமில்லை என்பதை உரக்கச் சொல்லுகின்ற வகையிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், 16.4.2025 புதன் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி S. கோகுல இந்திரா அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர் தலைமைக் கழகச் செயலாளர்கள், மகளிர் சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் முன்னாள் அமைச்சர்கள், மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள், கழக மகளிர் அணி மாநில துணை நிர்வாகிகள், மகளிர் செய்தித் தொடர்பாளர்கள், மகளிர் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக மகளிர் அணியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக மகளிர் உள்ளிட்ட பெண்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்று அந்த அறிவிப்பில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Ponmudi DMK Edappadi Palaniswami ADMK protest 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->