பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்; வெளியுறவு அமைச்சகம் அறிக்கை..!
Birth certificate is mandatory for obtaining a passport
கடந்த, 2023 அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பின் பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
'பாஸ்போர்ட் சட்டம் 1980' விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 'கடந்த, 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசிதழில் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 2023, அக்டோபர் 1-க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை என்றும், பள்ளி சான்றிதழ், நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய உத்தரவு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு பிறந்த தேதிக்கான ஆவணங்களாக அவர்கள் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதற்கான சட்ட விதிகளில் நீண்ட காலமாகவே எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படாமல் இருந்த நிலையில் இந்த புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானவர்களிடம் பிறப்பு சான்றிதழ் இருக்காது என்பதால், அது பற்றி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தற்போது முதற்கட்டமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Birth certificate is mandatory for obtaining a passport