டெல்லியில் எரிந்த நிலையில் சூட்கேஸில் பெண் சடலம்! குடியரசு தினத்தில் அதிரவைத்த பின்னணி!
Body of a woman in a suitcase burned in Delhi
தலைநகர் டெல்லியின் காஸிபூரில் நேற்று அதிகாலை பாதி எரிந்த நிலையில் சூட்கேஸில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் கொல்லப்பட்டவர் 23 வயது ஷில்பா பாண்டே என்றும், குற்றவாளி அவரது தந்தை வழி உறவுக்காரரான 22 வயது அமித் திவாரி என்றும் தெரியவந்தது.
ஷில்பா, கடந்த நவம்பரில் சூரத்திலிருந்து வெளியேறி அமித்துடன் வாழ்ந்து வந்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி குடும்பத்துடன் வாழ்ந்து வந்த அமித்தை, குடும்பத்தை விட்டுப் பிரிந்து தன்னுடன் தனியாக வாழும்படி ஷில்பா வற்புறுத்தியதாகவும், இல்லையென்றால் உறவு குறித்து குடும்பத்திடம் தெரிவிப்பேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.
கடந்த 25 ஆம் தேதி இரவு மதுபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அமித் ஷில்பாவை அடித்து மயக்கமடையச் செய்து பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
பின்னர் நண்பர் அனுஜ் குமாரை வரவழைத்து, இருவரும் சடலத்தை காரில் ஏற்றிக்கொண்டு இரவிலிருந்து நள்ளிரவு வரை மறைவான இடம் தேடி அலைந்துள்ளனர். குடியரசு தின சோதனை காரணமாக பயந்த அவர்கள், பெட்ரோல் பங்கில் டீசல் வாங்கி, சூட்கேஸில் சடலத்தை வைத்து, காஸிபூர் காகித மண்டி அருகே சூட்கேஸை எரித்துள்ளனர்.
தற்போது காவல்துறை அமித் திவாரியை கைது செய்து விசாரித்து வருகிறது. ஷில்பாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Body of a woman in a suitcase burned in Delhi