#உத்திரபிரதேசம் || ரசாயன தொழிற்சாலை தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்வு.! பிரதமர் மோடி இரங்கல்.!
Chemical factory fire in uttarpradesh
உத்திரபிரதேசத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசம் மாநிலம் ஹபூர் பகுதியில் ரசாயனத் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, தீயானது மளமளவென கொழுந்து விட்டு எரிந்துள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தீ விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவில், ஹபூர் ரசாயன தொழிற்சாலை விபத்து நெஞ்சை பதற வைக்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Chemical factory fire in uttarpradesh