டெல்லி நீதிபதி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்..!!
delhi high court justice transfer to allhabad high court
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த 14-ந்தேதி கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை நடத்தி உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு அறிக்கை அளித்தார்.
அதன்படி, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் குழு ஒன்றை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமைத்துள்ளார். அத்துடன் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சட்டப்பணிகள் எதையும் ஒதுக்கக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. கொலீஜியத்தின் இந்த பரிந்துரையை ஏற்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு இது குறித்து வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் ஆலோசனையுடன், நாட்டின் ஜனாதிபதி, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவை, அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடுவதாகவும், யஷ்வந்த் வர்மா நேரடியாக அலகாபாத் உயர்நீதிமன்றம் சென்று தனது பணியை ஏற்றுக்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே நெடும்பாறை மற்றும் 3 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் "இந்த விவகாரம் தொடர்பாக மூன்று நீதிபதிகளை கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதால் தற்போது இந்த மனு பரிசீலனைக்கு உகந்தது அல்ல" என்றுக் கூறி தள்ளுபடி செய்தனர்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கனவே அலகாபாத் ஐகோர்ட்டில் இருந்துதான் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டு இருந்தார். தற்போது அவர் மீண்டும் அலகாபாத்துக்கு மாற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
delhi high court justice transfer to allhabad high court