ஜி-20 நாடுகள் கூட்டமைப்பிற்கு தலைமை ஏற்கும் இந்தியா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!
G twenty countries
ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் செயலகத்தை இந்தியாவில் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது என்றும், அதில் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் செயலகத்தை நமது நாட்டில் அமைக்கவும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், ஒட்டுமொத்த கொள்கை முடிவுகளை எடுக்கவும், அதனைச் செயல்படுத்தவும், அதற்காக தேவையான அமைப்புகளை உருவாக்கவும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு துறை அமைச்சகம் நிதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல அமைச்சகங்கள் அவற்றின் துறைகளிலிருந்து நிபுணத்துவம் பெற்றவர்கள் ஜி-20 செயலக பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரதமர் தலைமையிலான குழு ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் செயலக செயல்பாட்டிற்கு வழிகாட்டும் என்றும் நிதி அமைச்சர், உள் துறை அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழில் துறை, ஜவுளித்துறை, நுகர்வோர் விவகாரங்கள் துறை, உணவு மற்றும் பொது விநியோகத் துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் அந்த குழுவில் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜி-20 கூட்டமைப்பு செயல்பாடுகளுக்கு ஒட்டுமொத்த வழிகாட்டுதலை இந்த குழு வழங்கும் என்றும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜி-20 கூட்டமைப்பு தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட ஒருங்கிணைப்பு குழு ஒன்று அமைக்கப்படும் என்றும், அந்தக் குழு, உயர்நிலைக்குழுவின் ஏற்பாடுகள் குறித்த தகவல்களை அளிக்கும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் 20 நாடுகள் இணைந்து ஜி-20 நாடுகள் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்புக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒரு உறுப்பு நாடுகள் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இந்தோனேசியா தலைமை வகித்து வருகிறது. வரும் நவம்பர் மாதம் வரை இந்தோனேசியா தலைமை வகிக்கும்.
அதன் பிறகு டிசம்பர் மாதம் முதல் இந்தியா தலைமை வகிக்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளுக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜி-20 நாடுகளின் கூட்டமைப்பிற்கு 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை இந்தியா தலைமை வகிக்கும். 2024 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.