லஞ்சம் கேட்ட ஜி.எஸ்.டி அதிகாரி - லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வலையில் சிக்கிய உதவியாளர்.!
gst department officer arrested for bribe in mumbai
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பால்கரில் உள்ள ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் துணை ஆணையராக பணிபுரிந்து வருபவர் தாத்யாசேப் தேரே. இவர் வணிக வரியை குறைத்து கணக்குகாட்ட தனக்கு ரூ.15 லட்சம் லஞ்சம் தருமாறு ஒருவரிடம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அதன் படி லஞ்ச ஒழிப்பு போலீசார், புகார்தாரரிடம் பணத்தைக் கொடுத்து அதனை ஜி.எஸ்.டி. அதிகாரி தாத்யாசாகேப் தேரேவிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினார். அதன் படி அந்த நபர் மும்பை அந்தேரியில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து அதிகாரியிடம் பணம் கொடுப்பதற்காகச் சென்றார்.
ஆனால் அங்கு ஜி.எஸ்.டி. அதிகாரிக்கு பதிலாக அவரது உதவியாளரும், தனியார் வரி ஆலோசகருமான ஏக்நாத் பெட்னேகர் வந்து புகார்தாரரிடம் இருந்து லஞ்சப்பணத்தை பெற்றுக்கொண்டார். இதை அங்கிருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஓடி வந்து ஏக்நாத் பெட்னேகரை சுற்றிவளைத்து கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் லஞ்ச வழக்கில் தொடர்புடைய ஜி.எஸ்.டி. துணை ஆணையர் தாத்யாசாகேப் தேரே தலைமறைவாகிவிட்டார். அவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
gst department officer arrested for bribe in mumbai