குஜராத் :: 89 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
Gujarat First phase of voting in 89 constituencies has started
குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இன்று மற்றும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சி அமைத்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த முறை நடைபெறும் குஜராத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. குஜராத்தில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதேபோன்று டெல்லி மற்றும் அண்டை மாநிலமான பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சியும் குஜராத் தேர்தலில் களமிறங்கியுள்ளது.
இன்று நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக 89 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 88 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில் 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள், 70 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர்.
இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் 14,382 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் 2,39,76,670 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இடைவேளை இன்றி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
English Summary
Gujarat First phase of voting in 89 constituencies has started