சூரினாமில் இந்தியர்களுடன் ஜனாதிபதி முர்மு சந்திப்பு..!
Indian President Murmu meets Suriname Indians
இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, சூரினாம் மற்றும் செர்பியா நாடுகளுக்கு 6 நாட்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதில் முதல் கட்டமாக சூரினாம் சென்றடைந்த இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டு அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோகி பாரம்பரிய முறையில் வரவேற்றார்.
இதையடுத்து சூரினாம் தலைநகர் பராமரிபோவில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அந்நாட்டின் உயரிய விருதான "கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டார்" விருதை சூரினாம் அதிபர் இந்திய ஜனாதிபதிக்கு வழங்கி கௌரவித்தார். இந்த விருதை சூரினாம் நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கும், இந்திய-சூரினாமியர் சமூகத்தின் அடுத்த தலை முறையினருக்கும் அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி முர்மு தெரிவித்தார்.
இதன்பின்பு நடைபெற்ற பேச்சு வார்த்தையில், இரு நாடுகளுக்கு இடையே சுகாதாரம், விவசாயம், கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து சூரினாமில் வாழும் இந்தியர்கள் சந்தித்து பேசினார்.
அதில், சூரினாம் நாட்டில் வாழும் இந்தியர்கள் அந்நாட்டின் பொருளாதாரம் சமூகம் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்காற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா- சூரினாம் இடையேயான உறவுகளுக்கு தூண்களாக சூரினாம் இந்தியர்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
English Summary
Indian President Murmu meets Suriname Indians