கேரளா நக்சல் அமைப்பின் கடைசி தலைவர் கைது.
kerala naksal last leader arrested in hosur
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் வீட்டை விட்டு வெளியேறி, நக்சல் இயக்கத்தில் சேர்ந்து செயலாற்றி வந்தார். சமீபத்தில் கைது செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர்களான சி.பி. மொய்தீன், சோமன் ஆகியவர்களுடன், நெருங்கிய நபராக இருந்ததுடன், கேரளாவின் கபினி தள நக்சல் இயக்க தலைவராக செயல்பட்டு வந்தார்.
இவர் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நக்சல் இயக்கத்தின் அனைத்து தலைவர்களும், கைது செய்யப்பட்ட நிலையில் சந்தோஷ் தமிழகத்திற்குள் இடம்பெயர்ந்துள்ளதாக, கேரளாவின் நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் படி கேரளா மாநில நக்சல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தமிழக உளவுத்துறை போலீசார் இணைந்து நக்சல் சந்தோஷ் நடவடிக்கைகள் குறித்து, தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று, தமிழகத்தின் ஓசூர் பகுதியில் மறைந்திருந்த நக்சல் தலைவர் சந்தோஷை தமிழக போலீசார் உதவியுடன் கேரள மாநில நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை கேரளாவுக்கு அழைத்து வந்த பின்னர், இன்று மதியம் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விரைவில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேசிய புலனாய்வுத்துறை போலீசாரும் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால், கேரளா மாநிலத்தில் முகாமிட்டிருந்த, நக்சல்களின் கடைசி தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
kerala naksal last leader arrested in hosur