இன்று மகா கும்பமேளா நிறைவு : கங்கைக்கரையில் குவியும் பக்தர்கள்!
Maha Kumbh concludes today: Devotees throng Ganga
பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா இன்றுடன் புதன்கிழமை நிறைவு பெறுகிறது. இதையடுத்து கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் பிரசித்திபெற்ற திருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிரயாக்ராஜில்கடந்த ஜனவரி மாதம் 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி சாதுக்கள், துறவிகள், மடாதிபதிகள் என தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அலை அலையாக வந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகிறார்கள். மேலும் இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், சினிமா பிரபலங்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாளான மகா சிவராத்திரி தினமான இன்றுடன் புதன்கிழமை நிறைவு பெறுகிறது. மகா கும்பமேளா நிறைவு பெறுவதையொட்டி, நிறைவுநாள் நிகழ்ச்சி இன்று மிகப் பிரமாண்டமாக நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கங்கைக்கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகிறது.
மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமானோர் பிரயாக்ராஜ் நோக்கி வரத்தொடங்கியுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் நீண்ட தூரம் வாகனங்கள் மேற்கொண்டு நகரமுடியாமல் அப்படியே நிற்கின்றன.
எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், எந்த வித அசம்பாவித சம்பவமும் இன்றி நடத்துவதற்கு மாநில அரசும், மகா கும்பமேளா குழுவினரும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
மேலும் நேற்று மாலை 4 மணியில் இருந்து பிரயாக்ராஜிக்குள் நுழைய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தங்கள் நுழைவுப் புள்ளிகளின் அடிப்படையில் அருகில் உள்ள படித்துறைகளில் மட்டுமே புனித நீராட வேண்டும் என்றும் அதேபோல் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே நீராட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து புனித நீராடிய பின்னர் அந்தந்த பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இதன் மூலம் முக்கிய பகுதிகளில் பக்தர்கள் தேவையின்றி கூடுவதையும், அதனால் ஏற்படும் நெரிசலும் தவிர்க்கப்படும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Maha Kumbh concludes today: Devotees throng Ganga