மருத்துவமனைக்கு மதுபோதையில் வந்த நபர் - தட்டிக்கேட்ட அரசு மருத்துவருக்கு நடந்த கொடூரம்.!
man attack doctor in puthuchery govt hospital
புதுச்சேரியில் பாவாணர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் மகன் மகேஷ். இவர் கடந்த 12-ந் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததால், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், வினோத்குமார் தனது மகனைப் பார்ப்பதற்காக நேற்று இரவு அரசு மருத்துவமனைக்கு மது போதையில் சென்றுள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட அவரது மனைவி, மற்றும் சகோதரியை வினோத்குமார் தாக்கி தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார், கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவர் நவீன் என்பவரின் கழுத்தில் திடீரென குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மருத்துவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் வினோத்குமாரை மடக்கிப் பிடித்து புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, அரசுப் பொது மருத்துவமனை மருத்துவர்கள் தங்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கக்கோரி 1 மணி நேரத்திற்கும் மேலாக பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சிகிச்சை பெற வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
English Summary
man attack doctor in puthuchery govt hospital