'நாய் மாபியா'என்று விமர்சித்த வினீதா ஸ்ரீநந்தனுக்கு மும்பை நீதிமன்றம் அளித்த உத்தரவு என்ன தெரியுமா?
Mumbai court ordered Vineetha Srinandan who criticized dog mafia
மகாராஷ்டிரா மும்பையைச் சேர்ந்த 'லீலா வர்மா' என்பவர், தெருநாய்களுக்கு தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உணவளித்து வந்தார். இதற்கு குடியிருப்பு நலச்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து லீலா வர்மாவுடன் வாக்குவாதம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து லீலா, குடியிருப்பு நலச்சங்கத்தினர் தன்னை துன்புறுத்துவதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.கடந்த ஜனவரியில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'தெருநாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக, குடியிருப்பு நலச்சங்கத்தினருக்கு ஏதாவது பிரச்னை இருந்தால், அவர்கள் மாநகராட்சியை தான் அணுக வேண்டும்.
அதை விடுத்து, குடியிருப்பாளரை துன்புறுத்தக் கூடாது' என உத்தரவிட்டது.இந்த உத்தரவை விமர்சித்து, குடியிருப்பு நலச்சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் 'வினீதா ஸ்ரீநந்தன்', மற்ற உறுப்பினர்களுக்கு இ - மெயிலில், நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள், 'நாய் மாபியா' போல் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, நீதித்துறையை விமர்சித்ததற்காக வினீதா ஸ்ரீநந்தன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை நேற்று விசாரித்த நீதிபதிகள் அத்வைத் சேத்னா மற்றும் கிரிஷ் குல்கர்னி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றத்தை, 'நாய் மாபியா' என்று அழைப்பது போன்ற கருத்தை படித்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
இந்த விவகாரத்தில் வினீதாவின் மன்னிப்பை ஏற்க முடியாது. அவருக்கு ஒரு வாரம் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. மேலும் அவர் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, இந்த உத்தரவு எட்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
English Summary
Mumbai court ordered Vineetha Srinandan who criticized dog mafia