பீகாரில் பதற்றம்; தேர்வில் மோசடி புகாரில் பள்ளி மாணவன் சுட்டுக்கொலை..!
School student shot dead two others injured over allegations of cheating in exam
பள்ளித்தேர்வில் மோசடி செய்ததாக ஏற்பட்ட தகராறில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர். பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில், மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் மோசடி செய்ததாகக் கூறி இரண்டு குழு மாணவர்கள் மோதிக்கொண்டுள்ளனர்.
முதல் நாள் தொடங்கிய வாக்குவாதம், மறுநாள் மோதலாக மாறியுள்ளது. இரண்டு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டதோடு, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதன் போது மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த மாணவர்களில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பதற்றம் சூழ்நிலை நிலவியுள்ளது. சம்பவத்தில் ஒரு மாணவரின் காலிலும் மற்றொரு மாணவரின் முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் உயிரிழந்த மாணவரின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும் அங்கு அசம்பாவிதத்தை தவிர்க்க அந்த பகுதியில் போலீஸ் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் நாராயண் மருத்துவக் கல்லூரிக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்லப்பட்ட சிறுவனின் குடும்ப உறுப்பினர்களும் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள், போராட்டக்காரர்களிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
School student shot dead two others injured over allegations of cheating in exam