மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க செயற்குழு உருவாக்கியுள்ள உச்ச நீதிமன்றம்..!
Supreme Court forms working committee to prevent student suicides
நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மைய விடுதிகளில் மாணவர்களின் தற்கொலை வழக்குகள் அதிகரித்து வருகின்றது. இது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், டெல்லி ஐஐடியில் பயின்ற மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
தங்கள் பிள்ளைகள் சாதி ரீதியான பாகுபாடு காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களுடைய பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், இது குறித்த புகாரை காவல்துறை எடுத்துக்கொள்ள மறுத்துள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன் போது பேசிய நீதிபதிகள், கடந்த இரண்டு மாதங்களில், கல்லூரி விடுதிகளில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக அதிக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைகான காரணம் குறித்து நாம் விவாதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் போது நீதிபதிகள் கூறுகையில், பாகுபாடு, ராகிங் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது குறித்து நாங்கள் கவலைப்படுவதாகவும், கல்வி நிறுவன வளாகத்துக்குள் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளால் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வது கட்டாயக் கடமையாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 09 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான முக்கிய காரணங்களைக் கண்டறிந்து, தற்போதுள்ள விதிமுறைகளை பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை செயற்குழு தயாரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
அத்துடன், எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்திலும் திடீர் ஆய்வு நடத்த செயற்குழுவுக்கு அதிகாரம் உண்டு எனவும், இந்தப் செயற்குழு நான்கு மாதங்களுக்குள் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும், அதே நேரத்தில் இறுதி அறிக்கை எட்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Supreme Court forms working committee to prevent student suicides