கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்துக்கு 1,000 வீடுகள்..அரசு தலைமை கொறடா தகவல்!
1,000 houses for Nilgiris district under Kalaignar Dream House Scheme. Government Chief Whip Information
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 23 பயனாளிகளுக்கு ரூ.42.37 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் வழங்கினார்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாள் சமத்துவ நாள் விழாவில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.5.56 இலட்சம் மதிப்பில் பல்வேறு தொழில் செய்ய நிதியுதவி, சலவைப்பெட்டிகள் மற்றும் தையல் இயந்திரங்களும், தாட்கோ மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.24.80 இலட்சம் மதிப்பில் பல்வேறு தொழில் செய்ய நிதியுதவிகளும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.12.01 இலட்சம் மதிப்பில் வாகனங்கள் வாங்க மானிய தொகை என மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.42.37 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அரசு தலைமை கொறடா அவர்கள் தெரிவித்ததாவது :மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் ஏழை, எளிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை அறிவித்து, அதனை மிகவும் சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக அறிவித்தது மட்டுமல்லாமல், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழா பேருரையாற்றினார்கள்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் இன்றைய தினம் சமத்துவ நாள் விழாவாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து, நமது மாவட்டத்தில் இன்று நடைபெற்றுவரும் இந்த சமத்துவ நாள் விழாவில் 23 பயனாளிகளுக்கு ரூ.42.37 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நமது மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் நமது மாவட்டத்திற்கு 2025-2026ம் நிதியாண்டிற்கு 1,000 வீடுகள் கட்டுவதற்கான அனுமதியாணை கிடைக்கப்பெற்றுள்ளது. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும் எனவும், அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அரசு தலைமை கொறடா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.பீட்டர் ஞானராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியர் ராஜசேகரன், உதகை நகரமன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், உதகை நகர்மன்ற உறுப்பினர் விசாலாட்சி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
English Summary
1,000 houses for Nilgiris district under Kalaignar Dream House Scheme. Government Chief Whip Information