'மத சுதந்திரம் தொடர்பில் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அமெரிக்க அமைப்பு அவதுாறு'; இந்தியா கடும் கண்டனம்
US organization deliberately defamed religious freedom India strongly condemns
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்) என்பது 1998-ஆம் ஆண்டு சர்வதேச மத சுதந்திரச் சட்டத்தின் (IRFA) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க ஆணையம். இந்த அமைப்பின் ஆணையர்கள் அதிபராலும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் இரு அரசியல் கட்சிகளின் தலைமையாலும் நியமிக்கப்படுகின்றனர்.
இந்த அமைப்பு ஆண்டு தோறும் சர்வதேச அளவில் மத சுதந்திர மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிடும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் நடக்கும் சம்பவங்களை பட்டியலிட்டு, இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி விமர்சனங்களை முன் வைக்கும். இந்நிலையில், அதேபோல இந்தாண்டு இந்த அமைப்புஇந்தியாவை குறை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதாவது, லோக்சபா தேர்தலின் போது, பா.ஜ., இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்தது, சீக்கிய பயங்கரவாதி பன்னுானை கொலை செய்ய சதி செய்த இந்திய உளவு அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தும், அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய அரசு நிராகத்துள்ளதோடு, அந்த அமைப்புக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்) சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025-ஆம் ஆண்டு அறிக்கையை நாங்கள் பார்த்தோம். இது மீண்டும் ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியாவின் துடிப்பான பன்முக கலாசார சமூகத்தின் மீது அவதூறுகளை சுமத்தும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்.,ன் தொடர்ச்சியான முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டியவை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில் மத சுதந்திரத்திற்கான உண்மையான அக்கறையை விட , திட்டமிட்ட உள்நோக்கமே அதில் வெளிப்படையாக தெரிகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் இந்தியாவின் நிலையை குறை கூறும் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது எனவும், உண்மையில், யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்., அமைப்பு தான் சர்ச்சைக்குரிய அமைப்பாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
English Summary
US organization deliberately defamed religious freedom India strongly condemns