இலங்கையில் ஆட்சி செய்யும் ராஜபக்சே சகோதரர்களை பதவியில் இருந்து வெளியேற்ற இந்தியா அழுத்தம் தர வைகோ வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் ஆட்சி செய்யும் ராஜபக்சே சகோதரர்களை பதவியில் இருந்து வெளியேற்ற இந்தியா அழுத்தம் தர வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தீவில் சம உரிமை கோரிப் போராடிய ஈழத்தமிழர்கள் மீது போர் தொடுத்து, இலட்சக்கணக்கானவர்களைப் படுகொலை செய்து போரில் வெற்றி பெற்றதாகக் கூறி, சிங்கள மக்கள் இடையே இனவெறியைத் தூண்டி, தேர்தலில் வாக்குகளைப் பெற்று, ஆட்சிப்பொறுப்புக்கு வந்த குடியரசுத் தலைவர் கோத்தபாய ராஜபக்சே, தலைமை அமைச்சர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் தவறான கொள்கைகள், பொருளாதார நடவடிக்கைகளின் விளைவாக, அந்த நாடு கடுமையான நெருக்கடியில் சிக்கி இருக்கின்றது.

இந்தியப் பெருங்கடலில் தன் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த முனைந்த சீனா, ராஜபக்சே சகோதரர்களைப் பயன்படுத்தி, அந்த நாட்டுக்கு உள்ளே கால் பதித்தது. ஹம்பன்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்குப் பெற்றார்கள்; எண்ணெய்க் கிடங்குகள் அமைப்பதற்கு உடன்படிக்கை செய்து கொண்டார்கள். 

பெருந்தொகையைக் கடனாகக் கொடுத்து, படிப்படியாக இலங்கையைத் தன் கட்டுப்பாட்டுக்கு உள்ளே கொண்டு வர சீனா முயற்சிப்பதைப் புரிந்து கொண்ட இந்திய அரசு, தன் பங்குக்கு நிதியை அள்ளிக் கொடுத்து, இலங்கை அரசைத் தங்கள் வயப்படுத்த முனைந்தார்கள். சீனாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையைக் கைவிடச் செய்து, எண்ணெய்க் கிடங்குகள் அமைப்பதற்கான உரிமத்தைப் பெற்றார்கள்.

2019 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பொறுப்பு ஏற்ற கோத்தபாய ராஜபக்சே, அயல்நாட்டு உரங்கள் இறக்குமதிக்கு முழுத்தடை விதித்ததால், தேயிலை விளைச்சல் 30 விழுக்காடு குறைந்தது. 

பத்து இலட்சத்திற்கும் கூடுதலான ஐரோப்பியப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்கு வந்து சென்றனர். இலங்கையின் பல தேவாலயங்கள், ஐந்து நட்சத்திர விடுதிகளின் மீது, ஈஸ்டர் பண்டிகை நாளில் நடைபெற்ற தாக்குதல்களின் விளைவாக 350 பயணிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 

அவர்களுள் பெரும்பான்மையோர் ஐரோப்பியர்கள். அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா முடக்கத்தின் விளைவாக, ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளின் வருகை முழுமையாக நின்று போனது. எனவே, இலங்கை நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டது.

உணவு, எண்ணெய், சமையல் எரிகாற்று போன்ற அன்றாடத் தேவைப் பொருட்கள் கிடைக்காமல், மக்கள் பரிதவிக்கின்றார்கள். மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக, மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முடங்கி விட்டன; அறுவை மருத்துவம் நிறுத்தப்பட்டு விட்டது. அரசின் செலவுகளைக் குறைப்பதற்காக, பல நாடுகளில் இருக்கின்ற இலங்கைத் தூதரகங்களை மூடி விட்டார்கள்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, கடந்த 3 மாதங்களில் மட்டும், 23000 கோடி ரூபாய் இந்திய அரசு கடன் உதவி அளித்து இருக்கின்றது. 

கூடுதலாக, பெட்ரோல், டீசல், சமையல் எரிகாற்று உள்பட, சுமார் 40,000 கோடி ரூபாய் அளவிற்கு இந்திய அரசு உதவி அளித்து இருக்கின்றது. அதனால், கடந்த சில ஆண்டுகளில் 3 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்குக் காகிதப் பணத்தைக் கூடுதலாக அச்சிட்டு இருக்கின்றார்கள். அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கின்ற இலங்கையை மீட்பதற்கு, உலக வங்கி 50000 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார்.

இந்த மாத இறுதிக்குள் அமெரிக்காவுக்கு 7000 கோடியும், 2026 ஆம் ஆண்டுக்குள் 25000 கோடி ரூபாயும் இலங்கை அரசு திருப்பித் தர வேண்டும். ஆனால், இலங்கை அரசிடம் பணம் இல்லை. நாடு திவால் ஆகக்கூடிய நிலைமையில் இருக்கின்றது. 

இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்; இனப்படுகொலைப் போர்க்குற்றவாளிகளான ராஜபக்சே சகோதரர்களை, பன்னாட்டு நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில், மறுமலர்ச்சி தி.மு.கழகம் முன்வைத்து, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.  

இலங்கை மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க வேண்டும்; தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காக, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, 2014 ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. 

இருப்பினும்கூட, இலங்கையின் இன்றைய நிலைமையைக் கருதி, மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு உதவிட, தமிழக அரசின் சார்பில், அடிப்படைத் தேவைப் பொருள்களை அனுப்புவது என முடிவு செய்து, பொதுமக்கள் நிதி உதவி அளிக்குமாறு கோரி, முதல் அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் நிதி அளித்து இருக்கின்றோம். 

இலங்கை மக்களைப் பழி வாங்க வேண்டும்; அவர்கள் பட்டினி கிடந்து சாக வேண்டும் என்பது நமது நமது நோக்கம் அல்ல.

எரிப்பதற்கு விறகு கிடைக்காமல், தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து எரிப்பதாக, நேற்று என்னிடம் கூறினார்கள். கேட்க வேதனையாக இருந்தது. 

இலங்கையின் இன்றைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு, ராஜபக்சே சகோதரர்கள் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். அந்தக் கோரிக்கையை முன்வைத்து, நாளுக்குநாள் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. போராட்டங்களை ஒடுக்குவதற்கு, நெருக்கடி நிலையை அறிவித்த கோத்தபாய அதைத் திரும்பப் பெற்றார். ஆனால், மீண்டும் நேற்று நெருக்கடி நிலையை அறிவித்து இருக்கின்றார். அதற்கு, ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றன. 

ஆட்சிப் பொறுப்பில் இருந்து ராஜபக்சேக்கள் வெளியேறுமாறு, இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என, இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து உள்ளன.

எனவே, இலங்கை ஆட்சிப் பொறுப்பில் இருந்து இராஜபக்சே சகோதரர்கள் விலகுவதற்கு, அவர்களை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vaiko statement on Sri Lanka crisis


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->