பாஜகவுடன் கூட்டணி வைக்கவேண்டும் - அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal



அதிமுகவினர் ஒன்றுபடவேண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்கவேண்டும், திமுகவை வீழ்த்தவேண்டும் என்ற தலைப்பில், அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம்.ஜி.ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்றுவரை அதிமுகவின் அடித்தளத்தொண்டன் என்பதிலும், அண்ணா தி.மு.கவின் முதல் நியாகி என்பதிலும் பெருமை கொண்டவன். பதவிக்காகவும் ஆதாயத்துக்காகவும் நான் அதிமுகவில் இல்லை என்பதை என்னுடன் தோளுக்குத்தோள் இணைந்து கட்சிப்பணி செய்த சகாக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்கு தெரியும்.

புரட்சித்தலைவர் மறைவுக்குப் பிறகு ஜா, ஜெ. அணி இணைப்புக்கும் புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு சகோதரர்கள் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலகட்டத்திலும் அண்ணா தி.மு.க ஒற்றுமைக்குப் பணியாற்றிருக்கிறேன் என்ற தகுதியில் தான் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுகவுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.

1. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெரும்புகழை மேடைகளில் பேசுவது, சுவரொட்டி மற்றும் பேனர்களில் பெரிய அளவில் முதன்மைப்படுத்துவது,

2. பிரிந்து கிடக்கும் அதிமுக-வினரை ஒற்றுமைப்படுத்துவது

3. பா.ஜ.க மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவது:

அண்ணா திமுகவின் குலதெய்வம் புரட்சித்தலைவர். அந்தக் குலதெய்வத்தின் கொள்கை வழி நின்று அவரது புகழை, சிறப்பை இன்னும் அதிகமாக முதன்மைப்படுத்த வேண்டும். திரைப்படத்தில் சொன்ன கருத்துக்களை எல்லாம் ஆட்சியில் செய்துகாட்டியவர். இன்றுவரை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். அராஜகம், அரசியல் கொள்ளை, ஊழல் போன்றவைகளிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கவேண்டும். கட்சியின் தொண்டர்களை 1972-ல் உற்சாகமாகப் பணியாற்றிய, அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

கட்சிக்கு ஏன் இந்த தொடர் தோல்விகள். தொண்டனுக்கு ஏன் இந்த சோர்வு. இந்த தோல்வியை எப்படி தவிர்க்கலாம் என்று சிந்தித்தால் கட்சியின் ஒற்றுமை, கூட்டணி பலம் ஆகியவற்றின் தேவை புரியும். தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல புரட்சித்தலைவர் மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

1. மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். 

2.இந்திராகாந்தி அம்மையார் தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான அண்ணாதிமுக அனுமதி கொடுக்காததால் உறவு முறிந்தது. பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அண்ணாதிமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது.

3.இந்திராகாந்தி அம்மையார் மீண்டும் பிரதமரானார். தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் சென்று, 'என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார்.

4. அதன் பிறகு, காங்கிரஸுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து திமுக-வை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

5. அதன் அடையாளமாக திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலியச் சென்று ஆதரவு கொடுத்தார்.

7. தி.மு.க கூட்டணியை பிரிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தார். இது அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது.

8.1984-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் உடல்நலம் பாதித்திருந்தபோது இந்திராகாந்தி அம்மையார் நேரடியாக வந்து பார்த்து, அவர் வெளிநாட்டில் உயர்தரச் சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதிகளை செய்து தந்தார். 1984-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அண்ணா திமுக காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அண்ணா திமுக-வுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது மத்திய அரசின் உதவிகள் பெருமளவு பயன்தந்தது.

இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்றபோது கட்சி நலன், மக்கள் நலன், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம்.

கூடிவாழ்ந்தால் கோடி நன்மை...
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை...
மறப்போம், மன்னிப்போம்.
எனவே, ஒற்றுமையுடன் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல மத்திய பா.ஜ.க கட்சியோடு இணைந்து பலமான கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்.

2026 தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியைக் காப்பாற்ற முடியாது என்று ஒவ்வொரு அடிமட்டத் தொண்டர்களும் வருத்தப்பட்டு, 'இந்தக் கருத்துகளை கட்சி நிர்வாகிகளிடம் எடுத்து சொல்லி மாற்றுவதற்கு முயற்சி எடுக்க மாட்டீர்களா?' என்று கேட்கிறார்கள். அவர்களின் ஆதங்கத்தையே இந்த அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறேன்.

புரட்சித்தலைவரை முதன்மைப்படுத்துங்கள், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் விசுவாரிகளையும் திமுக எதிர்ப்பாளார்களையும் ஒற்றுமைப்படுத்துங்கள். பா.ஜ.க மற்றும் தோழமைக் கட்சிகளையும் இணைத்து 2026-ல் பலமான வெற்றி கூட்டணி அமைத்து கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK BJP Alliance Sathai Duraisamy statement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->