அதிகார போதை, அகங்காரம்! துக்ளக் தர்பார் நடத்தும் ஸ்டாலினின் திமுக அரசு - கொந்தளிக்கும் எடப்பாடி பழனிசாமி!
ADMK EPS Condemn to DMK MK Stalin Govt Tamilnadu Drugs issue
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மெத்தனப் போக்கால், சென்னையில் உள்ள அரசின் வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகள் எனப்படும் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.
சென்ற மாதம் ஒரு வழக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற முதல் அமர்வால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிசன் தாக்கல் செய்த ஆய்வு அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சென்னையில் குறிப்பிட்ட பகுதியில் தாராளமாகக் கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதை சுட்டிக்காட்டிய மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற முதன்மை பெஞ்ச், 'போதுமான அளவு இதைத் தடுப்பதற்கான காவலர்கள் இல்லை' என்று கண்டித்ததுடன், 'உயர்நீதிமன்றமே போதைப் பொருளைக் கட்டுப்படுத்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டியிருக்கும்' என்று எச்சரித்ததாகவும் நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வந்த செய்தியினை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை எதிர்க்கட்சிகள், உயர்நீதிமன்றம், நாளிதழ்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் திரு. ஸ்டாலினின் திமுக அரசு, போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' எனும் வார்த்தைகளை நிரூபிக்கும் வகையில் செயல்படும் இந்த அரசை நம்பி பயன் இல்லை.
காவல் துறையின் நேர்மையான அதிகாரிகள் மனது வைத்து செயல்பட்டால் மட்டுமே வாரியக் குடியிருப்புகளில் உள்ள இளைஞர்களை, குறிப்பாக மாணவ, மாணவிகளை அழிவில் இருந்து காக்க முடியும். பெற்றோர்கள் தங்களது மகன் மற்றும் மகள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க வேண்டும்.
தங்களது பிள்ளைச் செல்வங்களை போதை அரக்கர்களின் பிடியில் இருந்து காப்பாற்ற பெற்றோர்கள் முழு முயற்சி எடுக்க வேண்டும்.
அதிகார போதையில், தான் வைத்ததே சட்டம்,
எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்வேன்,
என்னைக் கேட்க யாருக்கும் உரிமை இல்லை
என்று அகங்காரத்தோடு துக்ளக் தர்பார் நடத்தும் ஸ்டாலினின் திமுக அரசுக்கு தமிழக மக்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்" என்று எச்சரிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்..
English Summary
ADMK EPS Condemn to DMK MK Stalin Govt Tamilnadu Drugs issue