சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் சென்னை! வாய்நீளம் காட்டும் விடியா திமுக அரசின் அவலம் - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
ADMK EPS Condemn to TNGovt Chennai issue
சுகாதாரத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் சென்னை என்றெல்லாம் வாய்நீளம் காட்டும் விடியா திமுக அரசின் அவலங்களில் ஒன்றாக சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை கழிவு நீரால் சூழ்ந்து, துர்நாற்றம் வீசுவதோடு நோய்த் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் வந்துள்ளன.
ஒரிரு நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை உட்பட காலியாக உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லை எனில், மருத்துவக்கல்லூரிகளை திறப்பது ஏன் என்று விடியா திமுக அரசுக்கு சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிய செய்தி ஊடகங்களில் வெளிவந்தது.
ஏற்கெனவே, நான் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதைக் குறிப்பிட்டு உடனடியாக ஏற்கெனவே கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்பவும், அரசு மருத்துவமனைகளில் மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை குறித்தும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வெளியிட்டிருந்தேன்.
இனியாவது, சுகாதாரத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகளை உடனடியாக வழங்கவும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுகாதார சீர்கேடுகளை போர்க்கால அடிப்படையில் சீர் செய்திடவும் தமிழக அரசை எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
ADMK EPS Condemn to TNGovt Chennai issue