மக்களின் ஆதரவுடன் மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் - எச்சரிக்கும் எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


தமிழ் நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழக (TANTEA) தொழிலாளர்களின் வாழ்க்கையை தமிழக அரசு சீரழிப்பதாக, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நீலகிரி என்றாலே நம் நினைவுக்கு வருவது - எழில் கொஞ்சும் மலை முகடுகளும், கோடை மலர் கண்காட்சியும், அழகான தேயிலை தோட்டங்களும்தான். அப்படிப்பட்ட அழகான பல தேயிலை தோட்டங்கள், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய நம் தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக அறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில், 1968-ம் ஆண்டு நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளில் சுமார் 4,311 ஹெக்டேர் நிலப் பரப்பில், தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிப்புப் பணியை மட்டுமே செய்து வந்த, தாயகம் திரும்பிய ஆயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரமாக, தமிழ் நாடு அரசு தேயிலை தோட்டக் கழகம் அமைக்கப்பட்டது.

தாயகம் திரும்பிய தமிழர்களின் 45 ஆண்டு கால உழைப்பிலும், பல கோடி ரூபாய் அரசின் நிதியைக் கொண்டும் உருவாக்கப்பட்ட இத்தேயிலை தோட்டக் கழகத்தை நம்பி சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது உழைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட டான்டீ (TANTEA) நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 5,317 ஏக்கர் தேயிலை தோட்டங்களை வனத் துறைக்கு ஒப்படைப்பு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது இந்த விடியா திமுக அரசு.

மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் ஒரு அரசின் கடமையாகும். மாறாக இந்த விடியா அரசு, அறிஞர் அண்ணா அவர்களால், தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக உருவாக்கப்பட்ட டான்டீ நிறுவனத்தின் தேயிலை தோட்டங்களை வனத் துறையிடம் ஒப்படைத்து அங்குள்ளோரின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை மீண்டும் வாழ்வற்றவர்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது இந்த நிர்வாகத் திறமையற்ற விடியா திமுக அரசு.

கடந்த பல ஆண்டுகளாக தேயிலையின் விலை, வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து டான்டீ நிறுவனமும் நட்டத்தில் இயங்கி வந்தது. ஆயினும், அத்தொழிலாளர்களின் நலன் கருதி, டான்டீ நிறுவனத்தின் வருவாயைப் பெருக்க மாண்புமிகு அம்மா அவர்கள் 2001-2006-ம் ஆண்டுகளில் டான்டீ நிறுவனத்தின் தேயிலையை தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு மற்றும் நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை துவக்கினார்கள்.

மேலும், இக்கழகம் நட்டத்தில் இயங்கினாலும், ஏழைத் தொழிலாளர்களின் நலன் கருதி அம்மாவின் அரசால் 2012 முதல் 2018 வரை 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் கொரோனா நோய் தொற்றின் காரணமாக தீபாவளி போனஸ் 10 சதவீதம் வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வந்த பிறகும் இந்த விடியா திமுக அரசு இந்த ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்காமல் 10 சதவீத போனஸே வழங்கியுள்ளது.

அம்மாவின் அரசு, ஓய்வு பெற்ற டான்டீ தொழிலாளர்களுக்கு சொந்த வீடு வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 108 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 72 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், 36 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போதைய வனத்துறை அமைச்சர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் தேயிலை தோட்டங்கள் உள்ளது என்றும், எனவே, இவரது சுய லாபத்திற்காக அரசு தேயிலை தோட்டக் கழகத்திற்குச் சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத் துறைக்கு மாற்றி டான்டீ தொழிற்சாலையையே மூடும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது தேயிலை தோட்டக் கழகத்திற்குச் சொந்தமான, தேயிலை பயிரிடப்பட்ட நிலங்களை வனத் துறைக்கு மாற்ற ஆணை வெளியிட்டுள்ள நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இதுவரை உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. 

இச்சூழ்நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சொந்த வீடு கூட இல்லாத நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட டான்டீ நிறுவனத்திற்குச் சொந்தமான குடியிருப்புகளை காலி செய்தால்தான் அவர்களது ஒய்வு காலப் பலன்கள் வழங்கப்படும் என்று நிர்வாகம் தற்போது நோட்டிஸ் வழங்கியுள்ளது.

கடந்த, 45 ஆண்டுகளுக்கும் மேலாக டான்டீ நிறுவனமே கதி என்று உழைத்த தொழிலாளர்கள், இந்த அரசு வெளியிட்ட ஒரே அரசாணையின் மூலம் இன்று நடுத் தெருவில் நிற்கதியாக நிற்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ் நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்திற்குச் சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத் துறைக்கு மாற்ற வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்றும், தாயகம் திரும்பிய தமிழ் சகோதரர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், 45 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தும், இன்னும் சொந்த வீடு கூட இல்லாத தொழிலாளர்களுக்கு, அம்மாவின் அரசு உருவாக்கிக் கொடுத்ததைப் போல சொந்த வீடுகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன். 

இல்லையெனில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்களின் ஆதரவுடன் மிகப் பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்".

இவ்வாறு அந்த அறிக்கையில் எடப்பாடி கே. பழனிசாமி  தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Say about TANTEA workers and land issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->