பாஜக உடன் கூட்டணி: முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க..!
AIADMK strongly condemns former mayor Saidai Duraisamy
முன்னாள் மேயர் சைதை துரைசாமி அவர்கள், அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது!
அஇஅதிமுக-வில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தொண்டர்கள் தான். "நான் மட்டும் தான் எம்ஜிஆர் தொண்டன்" என்று சொல்லிக்கொண்டு பாடம் எடுக்கும் இவர், என்றைக்காவது இந்த இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா?

கழகப்பணி எனும் கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன் தான் அண்ணா திமுக தொண்டன். கழகப்பணி பக்கமே தலை வைக்காமல், தேர்தல் மேகங்கள் சூழும் சமயத்தில் "நானும் அரசியலில் இருக்கிறேன்" என்று தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மட்டுமே உள்ள திரு. சைதை துரைசாமி போன்றோருக்கு, இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி என்ன தெரியும்?
இன்றும் பூத் கமிட்டி வரை கழகப்பணிகளில் தொண்டர்கள் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வருவதை திரு. சைதை துரைசாமி போன்ற Guest Role அரசியல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த இயக்கத்தால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார். "அஇஅதிமுக-வில் இருந்திருக்காவிட்டால் தான் யார்?" என்ற கேள்வியை திரு. சைதை துரைசாமி கண்ணாடியைப் பார்த்து கேட்டுக்கொள்ளட்டும்.

இந்த இயக்கத்தை அழிக்க நினைத்த, நம் இதயதெய்வங்கள் இன்றும் குடியிருக்கும் கோயிலாக நாம் கருதும் நம் தலைமைக் கழகத்தை சூறையாடிய துரோகியின் பெயரை அஇஅதிமுக பெயர் கொண்ட, இரட்டை இலை சின்னம் கொண்ட Letter Head-ல் குறிப்பிடதற்கே திரு. சைதை துரைசாமி வெட்கப்பட வேண்டும்
இப்போதும் சரி, எப்போதும் சரி- இந்த இயக்கத்தின் பாதை நேரானது! நம் இலக்கு முடிவானது! மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி
அவர்கள் தலைமையில், மாண்புமிகு அம்மாவின் நூற்றாண்டு கனவு நோக்கி, தமிழ்நாட்டு நலனுக்கான தனிப்பெரும் இயக்கமாக அதிமுக என்றும் பயணிக்கும்...! என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
AIADMK strongly condemns former mayor Saidai Duraisamy