“நாங்கள் வற்புறுத்தினதால்தான் மனோஜ் ஆபரேஷன் செய்தார்” – கண்ணீர் மல்கும் ஜெயராஜ் உருக்கம்!
Manoj underwent the operation only because we insisted Jayaraj Urukkam breaks down in tears
தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு தான் இயக்குநர் பாரதிராஜாவின் மகன், நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மரணம். சிறந்த இயக்குநராக உருவெடுக்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்த மனோஜ், அந்த கனவை நிறைவேற்றுவதற்கு முன்பே 48 வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மனோஜின் மரணம் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத வருத்தமாகவே இருக்கிறது. இதற்கிடையில், பாரதிராஜாவின் சகோதரரும், நடிகருமான ஜெயராஜ், மனோஜின் இறப்பைச் சுற்றிய சோகம் மற்றும் பின்னணியை குறித்து உணர்ச்சிவயப்பட்ட பேட்டியொன்றை அளித்துள்ளார்.
“அவனுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம் என தொடக்கத்தில் அவன் சொல்லியிருந்தான். ஆனால், நாங்கள் தான் அவனை வற்புறுத்தினோம். குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்காக சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அவனிடம் கூறினோம்,” எனக் கூறும் ஜெயராஜ், அந்த நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
மனோஜுக்கு மார்ச் 7ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதன்பின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறிய பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மரணமடைந்த நாளின் நிகழ்வுகள் குறித்து,“அவன் அப்பாவுடன் சுமூகமாக பேசிக்கொண்டிருந்தான். தேனிக்கு ரெஸ்ட் எடுக்கப் போவதாகவும் சொன்னான். அன்று மாலை மனைவி கொடுத்த பப்பாளி பழத்தை சாப்பிட்டான். பின்னர், வீட்டில் வேலை செய்தவர்கள் கொடுத்த டீயை குடித்த சில நிமிடங்களிலேயே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு துடித்தான். ஆனால் யாரும் எதிர்பாராத இந்த அனர்த்தம் நடந்துவிட்டது,” என அவர் வலியுடன் கூறினார்.
மனோஜ் மிக எளிமையான, அனைவரிடமும் நன்றாக பழகும் நபர் என்று தெரிவித்த ஜெயராஜ்,“ஏதாவது பிரச்சனை இருந்தாலும், அதை எங்களிடம் சொல்லவில்லை. சொன்னால் நாங்கள் மனத்தில் வலி அடைவோம் என்று நினைத்திருக்கலாம்,” என்றார்.
மனோஜின் தந்தை பாரதிராஜா தன்னுடைய மகன் புகைப்படத்தை பார்த்துவிட்டு அழுதுகொண்டே இருக்கிறார் என்றும், அவரால் இச்சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பதாகவும் ஜெயராஜ் தெரிவித்தார்.
ஜெயராஜ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சின்ன மருமகள்” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Manoj underwent the operation only because we insisted Jayaraj Urukkam breaks down in tears