உ. பி. தேர்தல் பிரச்சாரத்தில் என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது - அசாதுதீன் ஒவைசி 'பகீர்' குற்றச்சாட்டு.!!
AIMIM Leader Asaduddin Owaisi Complains Of Death Threat
உலகத்தின் மிக அதிக செல்வாக்கு மிகுந்த 500 முஸ்லிம்களில் ஒருவராக உள்ளவர் அசாதுதீன் ஒவைசி. ஹைதராபாதில் உள்ள ஒரு பாரம்பரிய அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒவைசி, ஐந்து முறை ஹைதராபாதில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
தற்போது ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராகவும், ஹைதராபாத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராகவும் உள்ளார் ஒவைசி. ஏஐஎம்ஐஎம் கட்சியானது தலித் மற்றும் பழங்குடி மக்களின் பிரச்சினைகளுக்கு தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அசாதுதீன் ஒவைசி, " தொடர்ந்து முஸ்லீம்கள் மற்றும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
மத்திய அரசின் அரசியல் காழ்ப்புணர்வு மற்றும் பழி வாங்கும் அரசியல் காரணமாக டெல்லியில் உள்ள எனது வீடு அடிக்கடி சோதனைக்கு உட்படுத்தப் படுகிறது. மக்களவைத் தேர்தலின் போது உ. பி. யில் தேர்தல் பிரச்சாரத்திற்காக நான் சென்ற போது என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
6 ரவுண்டு வரை துப்பாக்கிச் சூடு நடந்தும் இதுவரை ஒருவரையும் போலீசார் கைது செய்யவில்லை. தொடர்ந்து மகாராஷ்டிராவில் மசூதிகளை இடித்து வருகின்றனர். முஸ்லிம்களின் வீடுகள் மீதும் தொடர் தாக்குதல் நடக்கிறது. முஸ்லீம் மக்கள் தொகை குறைந்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேலும் எனக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுகுறித்து புகாரளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
English Summary
AIMIM Leader Asaduddin Owaisi Complains Of Death Threat