2012-ல் அதிமுக, இப்போ திமுக! இதெல்லாம் தப்புங்க - கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!
AMMK TTV Dhinakaran Condemn to TNGovt TASMAC
திருச்சி மாவட்டம், சீனிவாசா நகரில் பள்ளிகளுக்கு அருகாமையில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான .செந்தில்நாதன் அவர்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் காவல்துறையால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்ட உறையூர் பகுதி தனியார் மனமகிழ் மன்றத்தை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போதும் கைது செய்த காவல்துறை, தற்போது பொதுமக்களின் நலனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கும் அனுமதி மறுத்து அடக்குமுறையை கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வரும் போதெல்லாம் அடக்குமுறையும், அதிகாரப்போக்கும் அதிகரிக்கும் என்பதற்கு ஏற்ப, அரசின் தவறுகளையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டுவோர் மீது அடக்குமுறையை ஏவுவதும், பொதுமக்களின் நலனை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கும் அனுமதி மறுப்பதும் திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் இடத்திற்கு அருகே பள்ளிகள் இருப்பதை காரணமாக கூறி அனுமதி மறுத்திருக்கும் காவல்துறை, அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இயங்கிவரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அனைவரையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுபானக்கடையை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
AMMK TTV Dhinakaran Condemn to TNGovt TASMAC